மதுரை மாவட்டம் உரப்பனூர் பகுதியில் முத்துபாண்டி என்பவர் விஏஓவாக பணியாற்றி வந்தார். இந்த நிலையியல் திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த ராஜாமுகமது என்பவரின் மனைவி சம்ரத் பீவி இடப்பிரச்சனை தொடர்பாக முத்துபாண்டியை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  கருத்து மோதலுக்குப் பிறகு, சம்ரத் பீவி தனது இரு மகன்களுடன் அதிகாலை நேரத்தில் முத்துப்பாண்டியின் வீட்டிற்குள் புகுந்து, அம்மிக்கல்லை தூக்கி அவரது தலை மீது போட்டனர்.

இதனை பார்த்து  முத்துப்பாண்டியின் மனைவியும், குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து படுகாயங்களுடன் முத்துபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்ரத் பீவி, அவரது மகன்கள் ரபிக்ராஜா (19) மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

இந்த நிலையில் முத்துப்பாண்டி, இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 16 வயது சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார், மற்ற இருவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.