பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டு பணிகளுக்கான குழுக்களும் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நம் முதல் மாநில மாநாடு வெற்றி கொள்கை திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பது எனக்கு தெரியும்.

அரசியலை வெற்றி தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல் ஆழமாக உணர்வாகவும், கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்த தருணங்கள் மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை செயல் மொழிதான் நமது அரசியலுக்கான தாய் மொழி. மாநாடு களப்பணிகளில் மட்டுமல்லாமல் நம் ஒட்டு மொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல் மையப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவளும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணும் அந்த தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்கு தெரியும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாடு ரீதியாகவே கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி சாலை என்னும் விவேகசாலையில் சந்திப்போம் வெற்றி நிச்சயம் என தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.