தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 57% மக்களால் நேசிக்கப்படுகின்ற முதல்வர் என்ற சிறப்பை நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெற்றுள்ளார். தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நாம் மற்றொரு மொழி போருக்கு தயாராகி வருகின்றோம்.

ஒன்றிய அமைச்சர் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என்று கூறுகிறார். பொழுது போகவில்லை என எழுதக்கூடிய அரசியல் சாசனம் கிடையாது இது, அம்பேத்கர் சாசனத்தில் முன்மொழிக் கொள்கை பற்றி எழுதப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கும் சர்வ சிக்ஷா அபியன் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அஜித்தின் படத்தில் வரும் காமெடியை போல ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் தான் ஆட்டோ ஓடும் என்பது போலத்தான் இது இருக்கிறது.

ஒருவர் வெளிநாட்டில் ஆங்கிலம் படிக்கச் சென்றார், வாயை திறந்தாலே அவர் பொய்யத்தான் சொல்கின்றார். இங்கு ஆண்ட கட்சி, ஆளுகின்ற கட்சி, ஆளப்போகின்ற கட்சி என எதுவாக இருந்தாலும் ஒன்றிய பாஜக முன்மொழிக் கொள்கையை கொண்டு வர நினைக்கிறது என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை நாம் கேட்கிறோம். இது என்ன உங்கள் அப்பன் வீட்டு பணமா, 40 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் இதில் உள்ளது. அந்த குழந்தைகளுக்காக தான் இந்த பணத்தை நாம் கேட்கிறோம். இதற்கு அனைவரும் சேர்ந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்பின் மகேஷ் பேசியுள்ளார்.