தனிநபர்களும் சிறுதொழில் நிறுவனங்களும் வங்கிகளில் பெறும் கடனை முன்கூட்டியே (Prepayment) திருப்பி செலுத்தும் போது, வங்கிகள் வசூலித்து வந்த கட்டணத்திற்கு தற்போது ரிசர்வ் வங்கி (RBI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய உத்தரவு 2026 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் அனைத்து கடன்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோட்டிங் ரேட் (Floating Rate) அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் இந்த சலுகையின் கீழ் வரும். குறிப்பாக, வர்த்தக நோக்கமில்லாமல் தனிநபர்கள் பெறும் கடன்கள், தனிநபர்கள் சிறுதொழில் நிறுவனங்களுக்காக பெறும் கடன்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும். அசலை முழுமையாக அல்லது பகுதி தொகையாக முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும்போது, எந்தவித கட்டணமும் இப்போது வசூலிக்க முடியாது.

இந்த உத்தரவு பொதுத் துறை வங்கிகள், தனியார் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், NBFC-க்கள் என அனைத்து வகை நிதி நிறுவனங்களுக்கும் கட்டாயமாகும். மேலும், லாக்-இன் கால அவகாசம் (Lock-in period) என்ற எந்த கட்டுப்பாடும் இங்கே இல்லாததால், வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தங்களின் கடனை திருப்பிச் செலுத்த முடியும். கூடுதலாக, வாடிக்கையாளர் அல்லாமல் வங்கியே முன்வந்து கடனை அடைக்கச் சொன்னாலும் கூட, வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி திடமாக தெரிவித்துள்ளது.

புதிய உத்தரவைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் இனி தவறான கட்டணச் சுமையின்றி தங்களின் கடனை முழுமையாக அல்லது பகுதியளவில் திருப்பிச் செலுத்த முடியும். இதன் மூலம் வேறொரு வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் மாற்றமும் சுலபமாக செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் நன்மைக்காக எடுத்த இந்த முடிவு, நிதிச் சந்தையில் வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.