
உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவு, ராணுவ பட்ஜெட், நிதிநிலைமை, இருப்பிடம் மற்றும் லாஜிஸ்டிக் திறன் போன்றவற்றை ஆராய்ந்து GFP (குளோபல் ஃபயர் பவர்) உலகின் வலிமையான மற்றும் பலவீனமான ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை வருடம் தோறும் வெளியிடும். இந்த பட்டியல் 145 நாடுகளில் உள்ள ராணுவ படைகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை ஆராய்ந்து வெளியிடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி கடந்த 10 வருடங்களாக வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து ரஷ்யா இரண்டாம் இடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அதன் பிறகு 15 லட்சம் ராணுவ வீரர்களுடன் இந்தியா 4-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ராணுவத்திற்காக வருடத்திற்கு 5.94 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. அதன் பிறகு 5-ம் இடத்தில் தென்கொரியாவும், யுனைடெட் கிங்டம் 6-ம் இடத்திலும், ஜப்பான் 7-ம் இடத்திலும், துருக்கி 8-ம் இடத்திலும், பாகிஸ்தான் 9-வது இடத்திலும், இத்தாலி 10-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்த பட்டியலில் பூட்டான் கடைசி இடத்தைப் பெற்றுள்ள நிலையில், பலவீனமான ராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து, மத்திய ஆப்பிரிக்கா, சோமாலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.