தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த ராம சுப்ரமணியன் (வயது 65) என்ற முதியவர், தன் உடலில் உள்ள கடுமையான தோல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறு வயது முதலே தோல் நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், காலத்தோட உடம்பு முழுக்க சிறு, பெரிய கட்டிகள் உருவாகி, தற்போது அவை பெரிதாகி கடும் வலி தருவதாக கூறுகிறார்.

எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ள அவர், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜிடம் மனு அளித்து, உதவியை நாடினார்.

“எனக்கு எந்த வருமானமும் கிடையாது. என் உடம்பின் நிலை காரணமாக நெருங்கிய குடும்பத்தினர் கூட என்னை தவிர்த்து விட்டனர். கல்யாணம் ஆகவே இல்ல. ஒரே நோக்கமா இருக்குறது – பசி இல்லாம நிம்மதியா வாழணும். நீங்கள்தான் எனக்கு உதவி தொகை அல்லது ஓய்வூதியம் மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்து, வாழ்க்கையைத் தாங்க உதவணும்” என கலங்கிய குரலில் கேட்டுக்கொண்டார் ராம சுப்ரமணியன்.

அவரது நிலை அங்கு வந்திருந்த பொதுமக்களையும், அதிகாரிகளையும் பதற வைத்தது. தன் வாழ்க்கையில் ஒரு நிமிட சந்தோஷமும் காணாமல் தவித்துள்ளதாக கூறிய ராமசுப்ரமணியன், “இந்த சொச்ச காலத்தையாவது நிம்மதியா பசி பட்டினி இல்லாம வாழணும்.

அதுக்கான ஒரே வழி அரசுதான்” என உருக்கமாக கூறினார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜ், தேவையான உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.