
தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையின் பேரில், மாநிலத்தின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வருமான வரியை தவிர்ப்பதற்காக போலி ரசீதுகளை பயன்படுத்தியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்விக்கடன், தனிநபர் கடன், வீட்டுவாடகை உள்ளிட்ட பிரிவுகளில் போலியான செலவுகளை காட்டி வரிவிலக்கு கோரியுள்ளனர். இதற்காக பல பான் எண்களுக்கு ஒரே போலி ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், மருத்துவச் செலவுக்கான போலி ரசீதுகள், வாடகை ஒப்பந்தங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. சில ஊழியர்கள் மின்சார வாகனங்கள் வாங்கியதாகவும், அதற்கான வட்டிப் பணம் செலுத்தியதாகவும் கூறி வரிவிலக்குக் கோரியுள்ளனர். இந்த மோசடியில் திருச்சி பி.எச்.இ.எல்., படைக்கலன் தொழிற்சாலை, தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், நெல்லை மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் இதில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.