தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியன் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் ஏடிஎமில் கொண்டிருந்த நபரிடம் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த நபரும் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொடுத்தார். நான்கு நாட்கள் கழித்து முனியாண்டியின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முனியாண்டி வங்கியில் புகார் செய்ததோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் முனியாண்டிக்கு பணம் எடுத்துக் கொடுத்தது தெரியவந்தது. இவர் வயதானவர்களை குறி வைத்து, பணம் எடுத்து தருமாறு உதவி கேட்கும் நபர்களின் ஏடிஎம் கார்டை வாங்கி மோசடியில் செய்துள்ளார். அவர்களது ஏடிஎம் கார்டை கையில் வைத்துக்கொண்டு வேறு ஒரு கார்டை உரிமையாளரிடம் கொடுக்கிறார். அதன் பிறகு உண்மையான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.