
திருநெல்வேலியை அடுத்த மேலப்பாலயத்தில் உள்ள பகுதியில் அமீர் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் செய்யது தமீம் (31) . இவர் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அங்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளையும் செய்துள்ளார்.
நேற்று கடை வேலைகளை வழக்கம்போல் முடித்துவிட்டு செய்யது தமீம் வீட்டிற்கு இரவு சாப்பிட வந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும், கடையில் சிறிது வேலை இருப்பதாக அப்பாவிடம் கூறிவிட்டு மீண்டும் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அதனால் அவரது தந்தை கடைக்கு சென்று பார்க்கலாம் என்று போனபோது செய்யது தமீம் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கடையில் இறந்த கடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமீர் அம்சா கதறி துடித்து அழுதார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் செய்யது தமீம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதோடு, மோப்ப நாய்கள் கொண்டு கொலை செய்தது யார் என்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமீம் உடலை பார்த்து அவரது குடும்பம் கதறி அழுதது சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.