திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மருத்துவரான மீரா உசேன்(82), தனது செல்போனில் வந்த வீடியோ அழைப்பை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய  நபர் தன்னை மும்பை சிபிஐ போலீசாக அறிமுகப்படுத்தி, “உங்கள் பெயரில் போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, உடனடியாக ஆதார் மற்றும் பான் விவரங்களை அனுப்புங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அந்த நபர், “உங்களை கைது செய்ய வேண்டாமெனில் ₹2 கோடியை எங்கள் கணக்கில் செலுத்துங்கள்” எனப் பயமுறுத்தியுள்ளார். இதனால் பெரும் பதட்டமடைந்த அவர், தனது வங்கிக்கணக்கிலிருந்து ₹55 லட்சம் மற்றும் ₹64.20 லட்சம் என மொத்தம் ₹1.19 கோடியை இரண்டு தனிப்பட்ட வங்கிக்கணக்குகளில் செலுத்தியுள்ளார்.

பின்னர் மீண்டும் அவர்கள் அழைத்த போது சந்தேகம் வந்த மீரா உசேன், உடனடியாக திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த ஜாகிர் உசேன், பெனட்டிக் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் டெலிகிராமில் எளிதாக பணம் சம்பாதிப்பது குறித்து தேடிய போது ஹிந்தியில் பேசி தங்களை தொடர்பு கொண்ட கும்பல் வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியதாகவும், அதனால் தங்களது ஆதார் எண், பான் கார்டு ஆகியவற்றை கொடுத்து வங்கி கணக்கை தொடங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் பணத்தை மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.