திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வகுப்பறையில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தக் கறைகளை சேகரித்து  ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையின் போது கட்டிட வேலைக்காக வந்த விக்னேஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஒருதலை காதல் காரணமாக வகுப்பறையில் அமர்ந்து தன்னுடைய கையை தானே பிளேடால் அறுத்துக் கொண்டது தெரிய வந்தது. அதாவது  சம்பவ நடந்த ஞாயிற்றுக்கிழமை  கல்லுரிக்கு விடுமுறை. அன்றைய தினம் தான் காதலித்த பெண்ணிடம் வீடியோ காலில் விக்னேஷ் பேசிய நிலையில் அவர் காதலிக்க மறுத்ததால் பிளேடால் கையை அறுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவர் காதலித்த பெண் கல்லூரியில் படிக்கும் மாணவி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.