கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பிங்கி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திருமணமான நாளிலிருந்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக பிரச்சனை பெரிதாக மாறியது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பின்னர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விவாகரத்து வழக்கில் பிங்கி 20 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வேண்டுமென்று கேட்டுள்ளார். இதற்கிடையில் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் பீட்டர் தன் வேலையை இழந்து மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். அதோடு மனதளவில் தொடர்ந்து பிங்கியும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன்பாக ஒரு தற்கொலை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய ‌ மனைவி பிங்கி என்னை கொலை செய்ய பார்க்கிறார். என்னுடைய மனைவியின் சித்ரவதை தாங்காமல் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் மனைவியின் தொல்லை தாங்காமல் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்த நிலையில் டெல்லியில் தொழில் அதிபர் ஒருவரும் மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று பெங்களுருவில் காவலர் ஒருவரும் தன்னுடைய மனைவி தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து தற்போது மனைவியின் டார்ச்சர் தாங்காமல் மீண்டும் ஒருவர் கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ‌