
தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து ரேபிஸ் என்ற வெறிநாய்க்கடி நோயை தடுப்பது தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடத்தப்பட்டது. அதில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இந்த நோயால் வருடத்திற்கு தமிழகத்தில் 10 முதல் 20 பேர் உயிரிழக்கின்றனர். அதனைப் போலவே நாய் கடித்து பலர் வெறிநாய் கடிக்கான தடுப்பூசியை போடுவதும் சிகிச்சை பெறுவதும் தொடர்ந்து வருகின்றது.
இதனை தடுக்க வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் முதல் தெரு நாய்கள் வரை அனைத்திற்கும் ஆண்டுக்கு ஒரு முறை என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தடுப்பூசி போட வேண்டும். அந்த தடுப்பூசியால் நாய்களுக்கு வெறி நாய் கடி நோய் பாதிப்பு ஏற்படுவது குறையும். இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய ரேபிஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.