
உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில், பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் புற்றுநோயுடன் பலர் இறந்ததாக காட்டி, போலி மருத்துவ சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரின் உதவியுடன் காப்பீடு தொகையை பெற்றுள்ளனர். மேலும், சிலர் உயிருடன் இருந்த போதே இறந்தவர்கள் என பதிவு செய்து, பின்னர் போலி விபத்து சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக, 4 பேர் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி, வழக்கமான வாகன சோதனையின் போது ஓம்காரேஷ்வர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த ரூ.11 லட்சம் மற்றும் 29 ஏடிஎம் அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் தலைமையிலான மோசடி கும்பல் அமைப்பு இருப்பது மற்றும் இது ஒரே மாநிலத்தில் மட்டும் அல்லாமல் 12 மாநிலங்களுக்கு பரவியுள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பல் டிஐஜி தமிழர் ஜி.முனிராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, 20 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியில், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜுலை 31-ல் பதாயூவை சேர்ந்த தரியாப், ஜுன் 20-ல் சஞ்சய், நவம்பர் 15-ல் டெல்லியின் அமான் மற்றும் ஜுலை 29, 2022-ல் தனாரி ஆகியோர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உயர்காப்பீடு செய்யப்பட்டு, பிறகு உயிரிழந்ததாக காட்டி தொகைகள் பெற்றுள்ளனர். கூடுதலாக, பிஎம்ஜேஏஒய் அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது, இந்த மோசடி வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.