
ஆந்திராவில் உள்ள கூடூர் பகுதியில் பிரகாசம்-அங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாத்து மேய்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் ஏழ்மையால் தவித்துள்ளனர். இவர்கள் முத்து-தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அங்கம்மா குடும்பத்தினரால் செலுத்த முடியாததால் அவர்கள் தங்களுடைய 15 வயது மகனை திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதாவது கடனை திரும்ப செலுத்துவதற்காக வாத்து மேய்த்து வேலை செய்யும் விதமாக குத்தகைக்கு தங்கள் மகனை அனுப்பி வைத்துவிட்டனர். அங்கு சிறுவன் வெங்கடேஷ் வாத்து மேய்த்து கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டான்.
ஆனால் சிறுவன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டான். அந்த சிறுவன் வேறு சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் பிரச்சினையாகிவிடும் என்ற பயத்தில் முத்து மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ராஜசேகர் ஆகியோர் சேர்ந்து குழிதோண்டி சிறுவனின் உடலை புதைத்து விட்டனர். பின்னர் மகன் குறித்து அங்கம்மா விசாரித்த போது அவர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. இதனால் அங்கம்மா ஆந்திராவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெண்பாக்கம் வந்து தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் வெங்கடேஷ் உடல்நலக் குறைவினால் இறந்து விட்டதாகவும் பாலாற்றின் கரையில் புதைத்ததாகவும் கூறினர். இதைத்தொடர்ந்து ஆந்திர போலீஸார் முத்து, ராஜசேகர் மற்றும் தனபாக்கியம் கைது செய்ததோடு காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உதவியோடு சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆந்திராவுக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.