தஞ்சாவூரில்  மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த இலக்கியன் (29), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டைப் புதுப்பிக்க ரூ.92 லட்சம் கடன் பெற, விஜய் ஆனந்த் (39) என்பவர் உதவியாக இருந்தார்.

இதற்காக ரூ.10 லட்சம் கமிஷன் வழங்குவதாக இலக்கியன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை பெற்ற பிறகு, விஜய் ஆனந்திற்கு ரூ.1.5 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டதால், அதை காரணமாக வைத்து அவரை மிரட்டியுள்ளார்.

கடந்த 9-ம் தேதி இரவு, இலக்கியனை அவரது கிளினிக்கிலிருந்து ஆட்டோவில் கடத்திச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன்(45), விஜய் ஆனந்த்(39), சந்திரரூபன்(26), சங்கர்(45), தர்மசீலன்(35) ஆகிய 5 பேரையும், கைது செய்துள்ளனர்.

பிள்ளையார்பட்டி பகுதியில் அவர்களை கைது செய்து, இலக்கியனை மீட்ட போலீசார், தற்போது ஐவரையும் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.