
சென்னை மாவட்டத்தில் உள்ள பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் வரை மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநகர பேருந்து இரவு 11.30 மணிக்கு கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது டிரைவர் வீரய்யா என்பவர் ரிவர்ஸ் எடுத்து பேருந்து நிறுத்துவதற்கு முயன்றார். அப்போது நடைபாதையின் கீழே ஓரமாக தூங்கிக் கொண்டிருந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது சக்கரம் ஏறியது.
இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று உயிரிழந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தில் இறந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.