
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக இந்த முறை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டின் போது பாமக தனித்து நின்றால் கூட 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தனர்.
அதே நேரத்தில் கூட்டணி தொடர்பாக மேலிடம் முடிவு செய்யும் எனவும் இது பற்றி நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ராமதாஸ் கூறியிருந்தார். இந்நிலையில் பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது இருக்கிறது.
இவர்கள் இருவரும் வெளிப்படையாக அதனை வெளிப்படுத்திய நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் ஒன்றாக கலந்து கொண்டதால் பிரச்சனை சரியானது என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்ததோடு ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொள்ளவில்லை.
இதனால் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் இடையே சலசலப்பு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் இது பற்றி பாமக கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி பேசியுள்ளார். இது பற்றி ஜிகே மணி கூறியதாவது, பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இது விரைவில் சரியாகும். மேலும் ஊடகங்கள் இதனை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.