அமெரிக்காவின் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமானது கடந்த வருடம் அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து தற்போது அதானி குழுமம் முறைகேடுகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை நிறுவனமான செபியின் தலைவர் மற்றும் அவருடைய கணவருக்கும் பங்குகள் இருப்பதாக கூறியுள்ளது. இந்த சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் பாஜக அரசை சரமாரியாக விமர்சித்து வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செபி நிறுவனத்தின் நேர்மை சமரசத்திற்கு உள்ளாகியுள்ளது என்று கூறினார். இதனை தற்போது பாஜக கட்சியின் எம்பியும் நடிகையுமான ‌ கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். அவர் ஒரு விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்து விடலாம் என்பதே அவருடைய நோக்கம். நம்முடைய பங்குச்சந்தையை குறிவைத்து வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளது என்பது நேற்று இரவு உறுதியாகியுள்ளது. எனவே ராகுல் காந்தி அவர்களே வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராக இருங்கள். மேலும் ஒருபோதும் உங்களை நாட்டு மக்கள் பிரதமராக அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.