
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்கட்சிகள் ஆளும் அரசை சரமாரியாக விமர்சித்தது. இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் சென்னை கமிஷனர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக அருண் கமிஷனராக பொறுப்பேற்றார். இவர் சென்னையில் கமிஷனர் ஆக பொறுப்பேற்ற பிறகு ரவுடிகளின் மீது அடுத்தடுத்து என்கவுண்டர் நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 3 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு பல ரவுடிகளை என்கவுண்டரில் போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். இந்நிலையில் சென்னை கமிஷனர் ஆக பொறுப்பேற்ற பிறகு அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரவுடிகளுக்கு புரியும் வகையில் அவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு மனித உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. மேலும் இதன் காரணமாக மனித உரிமைகள் ஆணையம் தற்போது கமிஷனர் அருணுக்கு அவருடைய பேச்சுக்கு விளக்கம் கேட்டு வருகிற 14-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.