நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், விநாயகர், தமன்னா உள்ளிட்டோர்  நடித்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மனைவியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகையிடம் பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷைனி சாரா ஒரு வீடியோவில் கூறியதாவது, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிப்பதற்கு உங்களை தேர்ந்தெடுத்துள்ளோம் எனக்கூறி அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதனை நம்பிய ஷைனி அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் கார்டு உங்களிடம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஷைனி இல்லை என கூறியதால் நாங்கள் ஏற்பாடு செய்வோம். சுரேஷ்குமார் என்பவர் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார் என கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு சுரேஷ்குமார் என்பவர் ஷைனியை தொடர்பு கொண்டு சேலை அணிந்து வீடியோ காலில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஷைனியும் வீடியோ காலில் பேசியுள்ளார். உடனே அவர் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க உங்களை தேர்ந்தெடுத்து விட்டோம் என கூறியுள்ளார்.

அதற்கு ஷைனி ரம்யா கிருஷ்ணன் தானே அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் எப்படி நடிக்க முடியும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் உங்களை வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறோம். நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டை பெற 12,500 பணத்தை அனுப்புங்கள் என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஷைனி சக நடிகைகளிடம் விசாரித்துள்ளார். அப்போது படங்களில் நடிக்க நடிகர் சங்க உறுப்பினர் அட்டை அவசியம் இல்லை. உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என கூறியுள்ளனர். இதனால் நடிகை ஷைனி என்னையே ஏமாற்றுகிறார்கள் நீங்கள் கவனமாக இருங்கள் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.