நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது அடிவயிற்றில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரஜினிகாந்த் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்     மா.சுப்பிரமணியன் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு பயப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் பெரிய அளவிலான சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விளைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்பு நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகம் எங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன் என்று ஆளுநர் ரவி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.