தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்துள்ளேன். தமிழகத்தில் உள்ள இன்னும் நான்கு கோவில்களில் வழிபாடு செய்ய உள்ளேன். தமிழகத்திற்கும் தேசத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். 15 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் நான் தரிசனம் செய்து உள்ளேன்.

அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு என்னால் வர முடியவில்லை. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசியலில் ஈடுபடுவது குறித்து நான் ஏற்கனவே வரவேற்பு தந்துள்ளேன். தமிழ்நாட்டு அரசியல் களத்திற்கு யார் வந்தாலும் அதனை நான் வரவேற்க தயாராக இருக்கின்றேன். ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.