வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பாண்டியன் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை மனோகரன் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் இருக்கும் அருள்மிகு கங்கை அம்மன் கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தில் இருந்தபடியே கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு சிறிது நேரத்தில் பிளேடால் கழுத்தை கொஞ்சம், கொஞ்சமாக அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அதன் பிறகு ஒரு சிலர் மனோகரனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மனோகரன் வீட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு யாரோ தன்னை அழைப்பதாக கூறியுள்ளார். அவரும் பதட்டமாகவே இருந்திருக்கிறார். மனோகரன் தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கான காரணம் தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.