சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு மதுரவாயில் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பள்ளியில் மோகன் என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வகுப்பறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் அச்சத்தில் இருந்த மாணவி நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்தார். ஆனால் அந்தப் பள்ளியில் வேலை பார்க்கும் வேறொரு ஆசிரியருக்கு மோகன் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் அறிவியல் ஆசிரியர் மோகன் பற்றி கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் மோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மோகன் தான் மறைத்து வைத்திருந்த 25 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கியுள்ளார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மோகனுக்கு சிகிச்சை முடிந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் மோகன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.