
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அணையில் இருந்து வினாடிக்கு 1.7 லட்சம் கன அடி நீர் வெளியேறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அணைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஆடிப்பெருக்கு அன்று அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.