சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமான படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படையின் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் நேரில் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஏராளமான மக்கள் வந்த நிலையில் மெரினா கடற்கரையே ஸ்தம்பித்தது. இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி அளவில் முடிந்த நிலையில் போக்குவரத்து நெரிசலால் அந்த பகுதி முடங்கியது.

மாலை 6:00 மணிக்கு பிறகு தான் போக்குவரத்து சீரானது. இந்நிலையில் மெரினாவில் அதிக வெயில் நிலவியதன் காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக 93 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர்கள் 40 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிக வெயில் காரணமாக 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். அதன்படி பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ‌(34) ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.