
திருச்சி ஐ.எம்.ஐ.டி நகரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாலை தற்செயலாக ஊசியை விழுங்கிய நிலையில், உடனடியாக அவரை அவரது உறவினர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவசரமாக எக்ஸ்ரே எடுத்து, உணவுக் குழாயில் ஊசி சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சா்ஜிக்கல் கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றனர்.
அதன்படி OGD ஸ்கோப்பி (தொண்டை வழியாக சிறிய கேமரா ஊடாக பார்வையிடும் முறை) மூலம் ஊசி உணவுக் குழாயில் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் (CT Scan) மூலம் அந்த ஊசி, இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது, இது உடனடியாக அகற்றப்படவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக அமையும் நிலை உருவாகியது.
இதையடுத்து ஜூலை 6 ஆம் தேதி காலை, அனஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுத்து, ரிஜிடு பிராங்கோஸ்கோப்பி என்ற சிறப்பான கருவி மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் கூட்டாக செயல்பட்டு, மூச்சுக்குழாயில் சிக்கிய ஊசியை வெற்றிகரமாக அகற்றினர்.
மருத்துவமனையின் முதல்வர் ச. குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர் உதய அருணா தலைமையிலான மருத்துவக்குழுவின் இந்தவித சிறப்பான செயல்பாடு, அந்த இளம்பெண்ணின் உயிரை பாதுகாத்திருப்பது பெரும் பாராட்டுக்குரிய செயல் என வலியுறுத்தப்படுகிறது.