ஹரியானா மாநிலத்தை சோ்ந்த 26 வயது முஸ்லிம் நபா், 16 வயது முஸ்லிம் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா். எனினும் இது சிறாா் திருணம் எனக்கூறி அச்சிறுமி பஞ்ச்குலாவிலுள்ள சிறாா் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் அந்த முஸ்லிம் நபா் மனுதாக்கல் செய்தாா். முஸ்லிம் தனி நபா் சட்டப்படி 15 வயதை கடந்த பருவம் எய்திய முஸ்லிம் பெண் தன் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளதால், தனது மனைவியை சிறாா் காப்பகத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தார். அம்மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பருவம் எய்திய முஸ்லிம் பெண்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா போன்றோர் கொண்ட அமா்வு முன்பு நடந்தது. இந்நிலையில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், “14, 15, 16 வயது முஸ்லிம் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.

தனி நபா் சட்டத்தின் படி அதனை ஏற்க முடியுமா? குற்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க தனிநபா் சட்ட விதிகளைப் பயன்படுத்த முடியுமா?” என்று கூறினார். அதன்பின் நீதிபதிகள் கூறியதாவது “இவ்விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, மற்ற வழக்குகளுக்கான முன் உதாரணமாக இருந்துவிடக்கூடாது. இந்த விவகாரம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்று கூறினர். அத்துடன் இவ்விவகாரம் பற்றி விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, ஹரியாணா மாநில அரசு உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.