சென்னை ராயபுரத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை விமர்சித்து பேசினார். மேலும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறான ஒரு சொல்லை கூறினார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்தது. மேலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்தது. இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ராயபுரம் மேற்கு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி இஸ்லாமிய மக்களுக்கும், இஸ்லாமிய சொந்தங்களுக்கும் என்னென்ன சாதனைகள் உதவிகளை செய்திருக்கிறார் என பேசினேன். அப்போது முஸ்லிம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி, முஸ்லிம்களால் எனக்கு ஆபத்து இருக்கிறது என பாதுகாப்பு கேட்ட நடிகர் விஜய் அவர்களை தோலுரித்து காட்டும் முகமாக நான் பேசினேன்.

அப்படி பேசும்போது முஸ்லிம் மக்களை நான் ஏதோ இழிவுபடுத்தி விட்டதாக கருதிக் கொள்கின்றனர். நான் வாழுகின்ற பகுதி முஸ்லிம்கள் நிறைந்த பகுதி. என் வீட்டிற்கு அருகே இருப்பது மசூதி. எனக்கு ஓட்டுனராக கண்காணிப்பவர்களாக முஸ்லிம் மக்களே உள்ளனர். முஸ்லிம் மக்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு எதுவும் கிடையாது. நான் ஆதங்கத்தில் பேசி விட்டேன். அதில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.