
தமிழக பாஜக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலைப் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். மழைக்காலத்தில் நேரடியாக களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக தமிழக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக முதல்வர் திகழ்கிறார்.
ஆனால் துணை முதல்வர் உதயநிதிக்கு மூத்த தலைவர்களை எப்படி மதிப்பது என்பது கூட தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் முதல் தலைமகனாக விளங்கும் ஆளுநரை கொச்சைப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தற்போது உள்ள அரசு பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் மோசமான தனிநபர் துதி பாடும் அரசியலும், வெறுப்பு அரசியலின் உச்சகட்டமாக தனிப்பட்ட முறையில் தலைவர்களை அவமானப்படுத்துவது, கேலி பேசுவது, குறிப்பாக பெண் தலைவர்களை கூட விட்டு வைக்காமல் இகழ்வது என அரசியல் அநாகரகத்தின் உச்சகட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய மூத்த தலைவர்களே இன்றைக்கு தங்கள் வாரிசுகளை தூண்டிவிட்டு அவர்கள் பேசக்கூடிய அருவருக்கத்தக்க வார்த்தைகளை ரசித்து அழகு பார்ப்பது தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லது கிடையாது. தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவருக்கும் வழிகாட்டும் விதமாக நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும். மேலும் ஆட்சியிலும் அரசியலிலும் நேர்மறையான அரசியலை தன் மகனுக்கு ஒரு நல்ல தலைவராக முதல்வர் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.