மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். தற்போது அதிமுகவிற்கு கிடைத்துள்ள இறையருள் பழனிச்சாமி தான். ஜெயலலிதாவை போல அவரும் பல சோதனைகளை சந்தித்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கியுள்ளார்.

ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரியில், 7.5சதவீதம் இட ஒதுக்கீடு, அம்மா மினி கிளினிக், காவிரி பிரச்சனைக்கு தீர்வு என பல வரலாற்று நிகழ்வுகளை பழனிசாமி செயல்படுத்தியுள்ளார். முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல மக்கள் சேவைக்கான பதவி என்று புதிய இலக்கணத்தை படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று எதிரிகள் மற்றும் துரோகிகள் முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை எந்த வகையிலும் அசைத்துப் பார்த்து விட முடியாது. இதனால் அதிமுகவிற்கு எந்த ஒரு சேதாரமும் இல்லை. இது மக்களால் பாதுகாக்கப்படுகின்ற கட்சி என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.