மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் தள்ளுவண்டியில் முட்டை விற்று பிழைப்பு நடத்தும் சுமன் என்பவருக்கு, ரூ.6 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டெல்லியில் “பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்” என்ற நிறுவனத்தை அவரது பெயரில் பதிவு செய்துள்ளதாகவும், அது தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இதுவரை டெல்லிக்கே செல்லாத தனது பெயரில் அத்தகைய நிறுவனம் எப்படி தோன்றியது என சுமன் அதிர்ச்சி தெரிவித்தார்.

இது பற்றி அவரின் தந்தை கூறும் போது, எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால் ஏன் நாங்கள் உழைக்க வேண்டும்? “நாங்கள் தினசரி வாழ்வை நடத்தவே போராடுகிறோம். எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், என் மகன் சாலையோரத்தில் முட்டை விற்றுக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் என்ன?” எனக் கேட்டுள்ளார். வழக்கறிஞரின் கூற்றுப்படி, சுமனின் தனிப்பட்ட ஆவணங்கள் யாரோ மோசடியாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக காவல்துறை மற்றும் வருமான வரித்துறையை அணுகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த ஜூஸ் கடை வியாபாரியான எம்.டி. ரஹீஸுக்கும் ரூ.7.5 கோடிக்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த  2020-21ஆம் ஆண்டில் அவரது பெயரில் கோடிக்கணக்கான போலி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அவர் கூறும்போது “நான் ஒரு ஏழை ஜூஸ் வியாபாரி. இவ்வளவு பணத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை. அரசாங்கம் எனக்கு உதவவேண்டும். நான் பொய்வழக்கில் சிக்கவைக்கப்படக்கூடாது” என அவர் கோரிக்கையிட்டுள்ளார். அவரது ஆவணங்கள் கடந்த  2022 ஆம் ஆண்டு பஞ்சாப் தேர்தல் நன்கொடைச் சூழலில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வருமான வரித்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிகிறது.