கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனுக்கும், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆர்ச்சா என்பவருக்கும் மே 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் பிற்பகலில், ஆர்ச்சா தனது தங்க நகைகளை (மொத்தம் 50 பவுன்) அர்ஜுனின் வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அடுத்த நாள் காலை, பீரோவை திறந்து பார்த்த போது 30 பவுன் நகைகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நகைகளை அர்ஜுனின் உறவினரான விபினி (46) என்ற பெண் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விபினி, புதுமண தம்பதியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது, ஆர்ச்சா நகைகளை எங்கு வைத்துள்ளார் என்பதை பேச்சுவழியாக அறிந்து கொண்டுள்ளார். தங்க நகைகளில் தீராத ஆசை கொண்ட விபினி, வீட்டில் இருந்தவர்கள் கவனிக்காத நேரத்தில் படுக்கை அறைக்கு சென்று பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை மின்னல் வேகத்தில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

திருடிய நகைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டிவைத்து, யாருக்கும் தெரியாமல் அர்ஜுனின் வீட்டருகே வீசியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது விபினி கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.