
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள “எம்பயர் கிளினிக்” என்ற தனியார் சிகிச்சை மையத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஃபரூக்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மயங்க் கட்டியார் (32), கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி முடி மாற்று சிகிச்சைக்காக கேசவ்புர பகுதியில் உள்ள டாக்டர் அனுஷ்கா திவாரியிடம் அறுவை சிகிச்சை செய்திருந்தார். சிகிச்சையின் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பியதிலிருந்தே, முகம் வீக்கம், பார்வை இழப்பு, கடும் தலைவலி ஆகியவை ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் வலியில் தவித்த மயங்க், மறுநாள் காலை தன் தாயின் மடியிலேயே உயிரிழந்தார்.
மயங்க் கட்டியாரின் சகோதரர் குஷாக்ரா கூறும்போது, சிகிச்சை நடத்திய டாக்டருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும், ஆன்லைன் கட்டண விவரங்கள், மருந்து சீட்டுகள், வீங்கிய முக புகைப்படங்கள் மற்றும் அழைப்பு பதிவுகள் ஆகியவை போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த மரணம் தொடர்பாக ஆறு மாதங்களாகியும் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முந்தைய ஒரு சம்பவமாக, பங்கி மின் நிலையத்தில் உதவிப் பொறியாளராக இருந்த வினீத் துபே (37) என்பவர், மார்ச் 13ம் தேதி முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக டாக்டர் அனுஷ்கா திவாரியிடம் சென்றிருந்தார். சிகிச்சை செய்யப்பட்டதும் உடல் நிலை மோசமடைந்ததால், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். அவரது மனைவி முதல்வர் போர்ட்டலில் புகார் அளித்த பிறகு, 54 நாட்கள் கழித்து போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். தற்போது டாக்டர் அனுஷ்கா திவாரி தலைமறைவாக உள்ளார். போலீசார் அவர் பறிமுதல் செய்த கிளினிக் மூடியுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.