கேரளா ஆளுநர் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் எடுத்து வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளா அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு அளித்த உரையை வாசிக்காமல் பத்தியை மட்டும் படித்துவிட்டு சில நிமிடங்களில் ஆளுநர் வெளியேறினார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கொல்லம் மாவட்டத்திற்கு சென்ற ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி காட்டினர்.

ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டதால் காரில் இருந்து இறங்கிய அவர் மாணவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன் சாலையோர தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். சட்ட ஒழுங்கு சீர்கெடுவதை முதலமைச்சர் ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆளுநர் தனது வாகனத்தில் இருந்து வெளியேறியது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது. இதனை அவர் செய்திருக்கக் கூடாது என்று கூறியதோடு ஆளுநர்களின் பாதுகாப்பை சிஆர்பிஎப்-இடம் ஒப்படைத்திருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆளுநர் மீண்டும் மீண்டும் எடுத்து வருவதாக கூறிய பினராயி விஜயன் இதன் மூலமாக மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பை அனுபவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.