ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் இருக்கும் தனியார் அரசு போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி படித்து வருகிறார். இளம்பெண்ணின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாக உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் இளம்பெண் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாதப்பட்டியில் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஈரோடு சென்று அங்கிருந்து கோவை செல்வதற்காக ரயிலில் ஏறினார். அவர் அதிக அளவு மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அந்த ரயில் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றபோது சதீஷ்குமார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் உதவி எண் 139 எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். உடனே போலீசார் துரிதமாக செயல்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் சதீஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே ஆந்திரா சென்ற கர்ப்பிணிக்கு வேலூர் அருகே ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஒரு இளம் பெண்ணுக்கு ரயிலில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.