
ஏர் இந்தியா விமானத்தில் பைலட் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AI2414 எனும் விமானம் பெங்களூரு கெம்பேகோடா விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்தது. பிரதான பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் விமான காபினில் அமர்ந்திருந்தனர்.
அந்நேரத்தில், முக்கிய பைலட் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக துணை பைலட் அவசரசிகிச்சை நடவடிக்கையில் ஈடுபட்டு, தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வழங்கினார். விமானம் டேக் ஆப் செய்ய நேரம் வெறும் சில நிமிடங்கள் இருந்த நிலையில், அந்த விமானம் தரையிலேயே நிறுத்தப்பட்டது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பைலட் விமான நிலைய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மாற்று பைலட் கொண்டு விமானம் பின்னர் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, இந்த சம்பவம் ஏர் இந்தியா மேலாண்மை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (DGCA) பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே, அகமதாபாத்தில் நடந்த சம்பவம் காரணமாக மூன்று அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் பணி நேரத்தில் விமானி பணிக்கு அமர்த்தப்பட்டாரா? அல்லது பைலட் தனது உடல்நல குறையை மறைத்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்காலத்தில் தடையின்றி விமானப் போக்குவரத்து நடை பெற, தீவிர விசாரணை அவசியம் என்று விமான பயணிகள் மற்றும் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.