கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் நேற்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28 மற்றும் 22 வயதுடைய சகோதரிகள் பயணம் செய்தனர். இவர்களின் இருக்கையின் அருகே 30 வயதுடைய ஒரு வட மாநில வாலிபர் இருந்தார். இந்த ரயில் திருப்பூர் அருகே வந்த போது திடீரென அந்த 22 வயது பெண்ணின் இடுப்பு மற்றும் உடம்பின் பல பகுதிகளில் தொட்டு 30 வயது வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அந்தப் பெண் அவரை கண்டித்த நிலையிலும் தொடர்ந்து அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அந்த ரயில் சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தை அடைந்ததும் ரயில்வே காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து முறையாக புகாரும் பெற்றுக்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாக்குமார் என்பது தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஓடும் ரயிலில் மீண்டும் இளம் பெண் ஒருவருக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.