சேலம் மாவட்டம் வைத்திய உடையார் காட்டுப்பகுதியை சேர்ந்த நேதாஜி குமார் மற்றும் நந்தினி தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது இவர்களது வீட்டின் அருகில் உள்ள நந்தினியின் தாய் கலைச்செல்வி இடம் குழந்தையை விட்டு செல்வது வழக்கம். கலைச்செல்வி மின் மோட்டார் உடன் கூடிய தையல் எந்திரம் வைத்து வீட்டிலேயே துணிகள் தைக்கும் தொழில் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லும் போது நந்தினி குழந்தையை பாட்டி வீட்டில் விட்டு சென்றுள்ளார். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது கலைச்செல்வி துணி தைத்துக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று தையல் எந்திரத்திற்கு செல்லும் மின் ஒயரில் கை வைத்துள்ளது. இதில் பாட்டி கண்முன்னே மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.