தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். நடிகர் விஜயின் முதல் மாநாடு நடந்த இடத்தில் சுமார் 100 அடி உயர கொடி கம்பம் ஒன்று நிரந்தரமாக நடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விவசாயி உடன் 5 வருட காலத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. அதோடு அதற்காக நிலம் வழங்கிய விவசாயிக்கு கறவை மாடு ஒன்றினை நடிகர் விஜய் வழங்கிய நிலையில் அந்த மாடு சரியான முறையில் பால் கறக்க வில்லை என்று விவசாயி குற்றச்சாட்டு தெரிவித்ததால் தன்னுடைய நிர்வாகிகள் மூலம் புதிய மாடு ஒன்றினை அவர் வாங்கிக் கொடுத்தார்.

இந்நிலையில் மாநாடு நடைபெற நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக இன்று சென்னை பனையூரில்  உள்ள கட்சி அலுவலகத்தில் அவர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது விவசாயிகள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து ஒரு தாம்பூலத்துடன் 5 வகையான பழங்களை வைத்து வேஷ்டி சேலை உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார். அதோடு விவசாயிகளுக்கு சால்வையும் அணிவித்தார்‌. அதன் பிறகு குறைந்த நாட்களில் பந்தல் அமைப்பை சிறப்பாக நிறுவிய விஸ்வநாதன் மற்றும் அவருடைய குடும்பத்தினரையும் அழைத்து கௌரவப்படுத்திய விஜய் அவருக்கு தங்க மோதிரம் ஒன்றினையும் பரிசாக வழங்கினார். இதேபோன்று விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மாநாட்டுக்காக சிறப்பாக பணியாற்றியதால் அவருக்கு ஒரு பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். மேலும் விஜய் வழங்கிய பரிசால் விவசாயிகள் அனைவரும் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.