
பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் பீம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளைஞனும் அவரது தூரத்து உறவான அத்தையும் தகாத உறவில் இருந்ததாகக் கூறி, கிராம மக்கள் இருவரையும் வெறித்தனமாக தாக்கினர். இவர்கள் இருவரும் உண்மையில் தகாத உறவில் இருந்தார்கள் என்பதை உறுதியாக நிலையில் சந்தேகம் கொண்ட அவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர், இருவரையும் கட்டாயமாக திருமணம் செய்யும்படி அழுத்தம் தரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலால் காயமடைந்த இருவரும் முதலில் நர்பட்கஞ்ச் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் அராரியா சதார் மருத்துவமனையிற்கும் அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களது நிலைமையை கருத்தில் கொண்டு, பூர்னியா மற்றும் அதற்குப்பின் நேபாளத்தின் விராட்நகர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது அங்கு இருவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாரோ ஒருவர் போலீசாருக்கு தகவல் வழங்கியதின் பேரில், காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர், காயமடைந்த இளைஞரின் தந்தை ஜூலை 5ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு எண் 78/2025ன் கீழ் 8 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதியாகவும், பழிவாங்கும் நோக்கத்தில் நடைபெற்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என பீம்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மிதிலேஷ் பாண்டே உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.