அரியானா மாநிலத்தில் சபீர் மாலிக் என்ற வாலிபர் பசு பாதுகாப்பு கும்பலால் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறிய அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று ரயிலில் சென்றபோது முதியவர் ஒருவர் ‌ மாட்டிறைச்சி வைத்ததாக எண்ணி அவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களுக்கு தற்போது ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வெறுப்பை அரசியல் ஏணியாக மாற்றியவர்கள் நாடு முழுவதும் தங்களுடைய ஆட்சியின் மீதான பயத்தை விதைத்து வருகிறார்கள்.

பாதுகாவலர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள வெறுப்பு சக்திகள் தற்போது வெளிப்படையாகவே தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சட்டத்திற்கு பகிரங்கமாக அவர்கள் சவால் விடுத்துள்ளனர். பாஜக அரசினால் இந்த அயோக்கியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதால் தான் அவர்கள் துணிச்சலாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.