அரியலூர்  மாவட்டம் தத்தூர் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மருதாயி (60) என்ற மூதாட்டி, தன்னுடைய சொந்தமான நான்கு கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக நேற்று காலை வழக்கம்போல் ஓட்டி சென்றார்.

ஆனால், வழக்கம்போல் மாலை வீடு திரும்பவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினரும் உறவினரும், அவர் மாடுகளை மேய்க்கும் பகுதிக்கு சென்று தேடினர்.

அங்கு மருதாயி மற்றும் மூன்று மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அறுந்து கிடந்த மின் கம்பியை, தவறுதலாக மிதித்ததால் மருதாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மருதாயி உடல் மற்றும் இறந்த மூன்று மாடுகளையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்திருந்ததால், மின்கம்பி அறுந்து இருந்ததாகவும், அதனை கவனிக்காமல் சென்றதால் இந்த துயர சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவந்தது.

இதுதொடர்பாக  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.