சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையில் வசித்து வரக்கூடிய மஞ்சு, ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா, மஞ்சுவிடம் வாடிக்கையாளராக பழகிவந்துள்ளார். மஞ்சுவின் மகள் லாவண்யா ஸ்ரீ நீட்தேர்வில் தேர்ச்சியடைந்தார். இதை அறிந்த அபர்ணா ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் உள்ளதாகவும் ரூ.20 லட்சம் கொடுத்தால் லாவண்யா ஸ்ரீக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கிவிடலாம் எனவும் கூறியிருக்கிறார்.

இதனால் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம் என அபர்ணா கூறியுள்ளார். மேலும் மீதமுள்ள பணத்தை கல்லூரியில் சேர்ந்த பிறகு செலுத்திக்கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார். இதனை உண்மை என நம்பிய மஞ்சு சென்ற ஜனவரியில் ரூ.5 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா 5 நாட்களுக்கு பின் வாட்ஸ்அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அந்த சான்றிதழை எடுத்துக்கொண்டு ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சென்று மகளை சேர்ப்பதற்காக மஞ்சு சென்றபோது, அது போலியான சான்றிதழ் என தெரியவந்தது. இதன் காரணமாக ஷாக்கான மஞ்சு, தான் கொடுத்த பணத்தை அபர்ணாவிடம் திரும்ப கேட்டுள்ளார். அப்போது ரூ.5 லட்சம் பணத்தை தன் தம்பி வங்கிக்கணக்கிற்கு தான் அனுப்பியதாகவும், தனது தம்பியிடம் சென்று வாங்கிக்கொள்ளுமாறும் அபர்ணா கூறி அலக்கழித்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி அபர்ணா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.