கேரளாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.  கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கொல்லம் அருகே உள்ள நெடும்பன் பகுதியில் வசித்து வந்த சந்தீப் என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர் திடீரென மருத்துவமனையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார்.

இதில் மருத்துவர் வந்தனாவை சரமாரியாக குத்தியதில் அவர் காயமடைந்தார். இதனையடுத்து  டாக்டர் வந்தனாவை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் =. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மருத்துவர்கள் உரிய பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், கேரள அரசு, மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.