
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மனக்காடு ஜும்மா மசூதி, பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தர்களுக்கு தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து வழங்கியது. இதனால் மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணமாக இது விளங்குகிறது. மசூதி நிர்வாகிகள், விழாவிற்காக வந்த ஓட்டுநர்களுக்கும் தனியாக தங்குமிடம் மற்றும் வாகனங்களை நிறுத்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மசூதி நிர்வாகி தெரிவித்ததாவது, “நாங்கள் வழக்கமாக பக்தர்களுக்கு உணவு வழங்குகிறோம், ஆனால் இந்த ஆண்டு ரமலான் நோன்பு காரணமாக காலை உணவளிக்க முடியவில்லை. எனினும், நேற்று மாலை நோன்பு திறந்தபோது பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது,” என்றார். இதேபோல், திருவனந்தபுரம் செயின்ட் ஜோசப் மெட்ரோபாலிடன் கேதட்ரல் தேவாலயமும் பெண்களுக்கு ஓய்வு எடுக்கும் இடம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது. வெள்ளியம்பலத்தில் உள்ள செயின்ட் தெரேசா லிஸியூ தேவாலயத்தினர் பக்தர்களுக்கு மோர் சாதம் வழங்கியுள்ளனர்.
அட்டுக்கால் பொங்கால திருவிழா, ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படும் முக்கியமான பக்தி நிகழ்வாக விளங்குகிறது. கேரளா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். இந்த பண்டிகையின் அடிப்படை சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காவியத்திலிருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவியத்தில் கண்ணகிக்கு வழங்கப்பட்ட மதிய உணவினை நினைவுகூர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் உணவு அரிசி, வெல்லம், தேங்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி புதிதாக எடுத்த மண்பானை அல்லது உலோக பாத்திரங்களில் சமைக்கப்படுகிறது. மத நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் ஓர் அழகான உதாரணமாக, மசூதி மற்றும் தேவாலயங்கள் பக்தர்களுக்கு உதவிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்படுகிறது.