
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மாத சம்பளக்காரர்கள் பெறக்கூடிய பலரும் மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பில் மாற்றத்தை கொண்டு வருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மக்கள் புதிய வரிமுறைக்கு மாற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
அதனை ஊக்குவிக்கும் விதமாக புதிய வழி முறையில் புதிதாக வருமான வரி அடுக்குகள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் இந்த பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். அடுத்து சாமானிய மக்கள் மீதான வருமான வரி சுமையை குறைக்க வேண்டும் எனவும் மூலதன செலவினத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் தொழில் அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த பட்ஜெட்டில் எட்டாவது ஊதிய குழுவை அமைக்கும் அறிவிப்பு வெளியாகுமா என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், வருமானவரி அடுக்கு முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், வருமான வரி தள்ளுபடி அதிகரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் முன் வைத்துள்ளனர். அதனைப் போலவே காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், மத்திய அரசு பணிகளை வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்திற்கு விடும் நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே மத்திய பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சில அறிவிப்புகள் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.