
தமிழகம் முழுவதும் பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
இந்நிலையில் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ அல்லது கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வது தெரிய வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான மது கடைகளையும் இன்று மூடவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.