
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் கட்சியின் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.
அதே நேரத்தில் முக்கிய புள்ளிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்த எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருக்கிறது.
அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் நிலையில் திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் கண்டிப்பாக தேர்தலில் அவர் நிற்பது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் முதலில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மதுரையில் போட்டியிடுவார் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது மதுரை தொகுதியில் வெற்றி பெற்றால் அது ஒரு அரசியல் வரலாறாக மாறிவிடும் என்பதால் அந்த தொகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் சுற்றுப்பயணம் மதுரையில் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மதுரையில் போட்டியிடுவார் என அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூறும் நிலையில் தற்போது அங்கு அடித்துள்ள போஸ்டர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது மதுரை மேற்கு தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிடுவதாகவும் சுமார் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் ஜெயிப்பார் எனவும் கூறி மதுரையில் தற்போது நிர்வாகிகள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நிலையில் மதுரையில் நடிகர் விஜயை வெற்றி பெற வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆக்கியதற்கு நன்றி என்ற வாசகமும் அதில் அடங்கியுள்ளது. மதுரையில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து 3 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பதால் கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலிலும் அவர் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் கடந்த முறை திமுக கூட்டணி வேட்பாளர் நின்ற நிலையில் இந்த முறை திமுக கட்சியின் வேட்பாளரை நியமிக்க அக்கட்சியின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் மூர்த்தி ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதே தொகுதியில் கடந்த முறை நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. மேலும் ஒரு வேளை விஜய் மட்டும் இந்த தொகுதியில் போட்டியிட்டால் கண்டிப்பாக அதில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதில் ஐயமில்லை.